சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
போராட்டம் நடைபெறும் இடத்தில், இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உஜாந்தன் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இன அழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.