முக்கிய செய்திகள்

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் சில தமிழ் கட்சிகள் – எம்.ஏ.சுமந்திரன்

41

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லையென பிரசாரம் செய்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 பொறுப்புக்கூறல் என்ற வியடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே செல்லவேண்டும், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக செயலாளர் நாயகத்திடமும் பொதுச்சபையிலும் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்புச் சபை மூலமாக மட்டும் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படலாம்.

இதனுடன் இணைந்து சாட்சியங்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

அண்மையில் சிரியாவிலும் மியன்மாரிலும் இவ்வாறான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி அப்படியான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரரணையில் அந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறை, பொறுப்புக்கூறல் தொடர்பாக செய்யப்படமாட்டாது. சிறிலங்காவுக்கு அது தொடர்பான கரிசனையில்லையென அந்தத் தீர்மானம் சொல்லுகின்றது.

இந்நிலையில், தமிழ் மக்கள் சார்பிலே கேட்டுக்கொண்டதற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எப்போதையும்போல பலர் இதனை ஒரு தோல்வியாகச் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு என்று சிலர் செயற்பட்டனர்.

உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

மேலும் நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஏதாவது, கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு சென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக சமாதானப் படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்” என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *