முக்கிய செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தினரைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அமெரிக்க வாழ் இலங்கையர்களிடம் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

375

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் மூத்த வீரர்கள் என்றும், அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

போர் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும், போருடன் எவ்வித சம்பந்தமும் அற்ற பல சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றை இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்படும் வேட்டையாக கருதமுடியாது என்றும் இதன்போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டில் தன்னை சனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்கள் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதும் முக்கியமானதாக அமைந்திருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

போருக்கு அப்பாற்பட்ட இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளிகளாக நிரூபணமாகும் சந்தர்ப்பத்தில், அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதானது, உண்மையான இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்றும், அனைத்துலக ரீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள இவ்வாறான தவறுகளை சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணுக்கு புலப்படும், புலப்படாத பல வெற்றிகளை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இழந்த அனைத்துலக ஒத்துழைப்புகளை மீண்டும் பெற்றுக்கொண்டது பாரிய வெற்றியாகும் எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப்பயணமானது, சிறிலங்கா இராணுவத்தினரின் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *