சிறிலங்கா இராணுவத் தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்

532

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்துக்கு இன்று திடீர் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுடன் இராணுவத்தினர் பலரும் ஆலயத்திற்கு சென்றிருந்ததாக தெரியவருகிறது.

அதனைத் தொடர்ந்து யாழ்பாணக் கோட்டைக்கும் பயணம் செய்துள்ள அவர், அங்கு நிலைகொண்டுள்ள படையினரது நலன்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

யாழ்.கோட்டையிலுள்ள படையினர் குறைக்கப்படுவதாக ஒருபுறம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மறுபுறம் யாழ்.கோட்டையினில் படைத்தளமொன்றை திறக்க அரசு முனைப்பு காட்டிவரும் நிலையில் சிறிலங்கா இராணுவத் தளபதியின் இன்றைய இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் திணைக்களத்தின் கீழுள்ள கோட்டையிலிருந்து சிறிலங்கா படையினர் வெளியெற வேண்டுமென்ற கோரிக்கை யாழ்.மாநகரசபையாலும், தொல்லியல் திணைக்களத்தாலும் வலியுறுத்தப்படுகின்றது.

எனினும் வடமாகாண ஆளுநர், யாழ். நகரிலுள்ள படைமுகாம்களினை மூடி, அவற்றினை யாழ்.கோட்டையினுள் நிறுவுவதற்கு ஆலோசனை வழங்கிவருகின்ற நிலையில், புதிதாக முகாம்களை கோட்டையினுள் அமைக்கும் பணிகள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுமுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *