சிறிலங்கா இராணுவத் தளபதி வடக்கு கிழக்கின் சிவில் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

422

இலங்கை தீவிலுள்ள அனைத்து கோட்டைகளும் சிறிலங்கா இராணுவத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாண கோட்டையினை உரிமை கோருவதாக சிறிலங்கா இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாண கோட்டையினை சிறிலங்கா இராணுவம் உரிமை கோருவதாக அண்மையில் வெளியான அரசினது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியல் கருத்து தெரிவித்துள்ள வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், சிறிலங்கா இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தனது சொந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு சனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் விவகாரத்திலும் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் விவகாரங்களிலும் தலையிடுவதை மகேஸ் சேனநாயக்கா கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் முப்படைகளாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இராணுவ கட்டமைப்பினை தமிழ் மக்கள் ஆக்கிரமிப்பு சக்தியாகவே கருதுகின்றனர் எனவும், இது சிறிலங்கா இராணுவம் என்று பெயரிடப்பட்ட போதிலும், இது பெரும்பாலும் சிங்கள இராணுவம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமெனவே தமிழ் மக்களுடைய மனதில் இருப்பதாகவும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தால், தமிழ் மக்கள் அதைப் பார்வையிட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தென்னிலங்கையிலுள்ள கோட்டைகளை உரிமை கோராத இராணுவம், யாழ்ப்பாணம் கோட்டையினை மட்டும் ஏன் உரிமை கோருகின்றதெனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், காலி கோட்டையில் அரச அதிபர் அலுவலகமென்பவை இயங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *