சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தொடர்பில் விசாரணை

19

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய மேலும் சில உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா சேனாரத்ன தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அவை தொடர்பில் தகவல் வெளியிட முடியாது என அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த நிறுவனங்கள் தொடர்பில் தகவல் வெளியிடுமாறு ‘சிங்ஹ லே’  உள்ளிட்ட மேலும் சில அமைப்புகள் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், இதற்கான விளக்கத்தை தரும்படி சிறிலங்கா தர நிர்ணய நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேராவிடம் வினவியிருந்தன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் கூறிய விடயங்கள் தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில்,

சிறிலங்கா தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். அந்த நிலைப்பாட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இது தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது என்றார். எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *