சிறிலங்கா- பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி அனுராதபுரவில் உள்ள சாலிபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கைகுலுக்கல் -1 என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க பாகிஸ்தானில் இருந்து 6 அதிகாரிகளும், 35 படையினரும் சிறிலங்கா வந்துள்ளனர்.
இவர்களுடன் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த 4 அதிகாரிகளும் 40 படையினரும் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டுப் பயிற்சிகள் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்திரோபாய இராணுவ நடவடிக்கைகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, மற்றும் புரட்சி முறியடிப்பு போர்முறை தந்திரங்கள், தீவிரவாதம், அடிப்படைவாதத்துக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கைகள், மீட்பு மற்றும் தேடியறிதல், தீவிரவாத மறைவிடங்களின் மீதான தாக்குதல்கள், தற்கொலைக் குண்டுதாரிகளையும், வெடிபொருட்களையும் அடையாளம் காணுதல், தீவிரவாத முறியடிப்புச் சூழலில் புலனாய்வு திரட்டல், கிளர்ச்சியாளர்களை வேவு பார்த்தல், தாக்குதல்களை நிறைவேற்றுதல் போன்ற விடயங்களில் இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.