முக்கிய செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரன் மன்னிப்புக் கோர வேண்டும்

135

16 வயதிலிருந்து அனைத்து தமிழ் மாணவர்களும்  இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்றும், இது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ள யோசனையை வரவேற்பதாகவும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் அமைச்சர்  சரத் வீரசேகரவின் கருத்தை வரவேற்பதாகவும், அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அதிகாரிகளே பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும், ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை வழங்கலாம் என்றும், பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்றும் அவர் யோசனையை முன்மொழிந்திருந்தார்.

அவரது இந்தக் கருத்தை கடுமையாக கண்டித்துள்ள ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி சிறிலங்கா படையினர் இழைத்த குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நீதி கோர வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ள நிலையில், அதே இராணுவத்தில் தமிழர்களுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பது, அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர், இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக சி.வி.விக்னேஸ்வரன் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *