சீனா – இந்தியா இராஜதந்திர இழுபறி காரணமாக இலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

299

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணுவார் என்று இலங்கை அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை எனவும், வடக்கு வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

சீன நிறுவனம் 1.3 பில்லியன் ரூபாய்க்கு இதனை நிர்மாணித்துத் தருவதாகவும், இந்திய நிறுவனம் 2.2 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணித்து தருவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தன எனவும், 1.3 பில்லியன் செலவில் வீடுகளை நிர்மாணிப்பதற்குப் பதிலாக 2.2 பில்லியன் செலவிடுவது எதற்காகவென அமைச்சர் சுவாமிநாதன் கேள்வி எழுப்புகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40,000 வீடுகளை அமைப்பதற்கு இந்திய நிறுவனம் கடந்த அரசாங்க காலத்தின் போது இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், சீனா தற்போது முன்வந்து 1.3 மில்லியனில் வீடுகளை அமைத்துக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதையிட்டு, இந்தப் பணியை சீனாவுக்கு வழங்குவதா இல்லை இந்தியாவுக்கு வழங்குவதா என்பது தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.

எனவே இது இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை என்பதனால், குறித்த இரண்டு நிறுவனங்களுடனும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளார் எனவும், எது எவ்வாறாயினும் எந்த நிறுவனம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறதென்பது, வடக்கு மக்களுக்குப் பிரச்சினை இல்லை என்றும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *