சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

570

புதிய அரசமைப்பு தமிழரின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்காது என்று சுமந்திரன் கூறியிருப்பது, தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளிவிட்டுள்ளதற்கு ஒப்பானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மையக் குழுக்கூட்டம் வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், கூட்டம் நிறைவடைந்து மண்டபத்துக்கு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புக்கான வரைவை உருவாக்கும் பணிகளைச் சகல கட்சிகளும் இணைந்து உருவாக்கி வருவதனால், இது முழுமையாகத் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்தி செய்யாது என்று சுமந்திரன் தற்போது ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டிருக்கின்ற போதிலும், புதிய அரசமைப்பு கூட்டாட்சிக்குச் சமமானது என்றும், தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்திசெய்யும் என்றும், அந்த அடிப்படையில்தான் தாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்திவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் கூறியிருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான ஒரு தீர்வை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயேதான் இந்த வரைவுக்கான தேவை உணரப்பட்டது எனவும், இந்த வரைவு வெறுமனே தேர்தல் மாற்றங்களை உண்டாக்குவதற்கும், நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை மாற்றுவதற்கும் மட்டுமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனும் தொடர்சியாக தமிழ்மக்களுக்கு இருக்கக் கூடிய அத்தனை பிரச்சினைகளையும் மறந்து அரசமைப்பை நிறைவேற்றவேண்டும் என்றும், தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அதனைச் செய்யவேன்டும் என்றும் கூறியிருந்தார் எனவும், ஆனால் இன்று அந்த அபிலாசைகள் தீர்க்கப்படாது என்று சொன்னால் அந்தப் புதிய அரசமைப்புக்கான தேவை இல்லை என்றே கருதவேண்டியுள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அங்கு இல்லை என்றால் அது தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஏமாற்றுகின்ற செயற்பாடு எனவும், அரசுக்கு என்ன தேவையோ அரசின் நிகழ்ச்சிநிரலை எவ்வாறு நடத்த விரும்புகிறார்களோ, அந்நதவகையில் தான் சுமந்திரன், சம்பந்தன் போன்றோரது செயற்றிட்டங்களும் இருக்கின்றன எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

முன்னர் நாடாளுமன்றில் பிணைமுறி விவகாரத்தில் விவாதங்களை நடத்துமாறு எதிர்த்தரப்புகள் கூறியபோது ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் மொழிபெயர்க்கப்பட்ட பிறகே விவாதங்களை நடத்துமாறு சுமந்திரன் ஐக்கியதேசியகட்சி அரசைக் காப்பாற்றியிருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பொழுது அரசமைப்பு தமிழரின் உரிமைகளைத் தீர்காது என்றுகூறி நட்டாற்றில் விட்டு இலங்கை அரசுக்குத் தேவை எதுவோ அதனை நிறைவேற்றும் வேலையையே சுமந்திரன் செய்துகொண்டுவருகின்றார் எனவும், இவ்வாறு தமிழ் மக்களைத் தொடர்சியாக ஏமாற்றிவருவது மாத்திரம் அல்லாமல், இவர்கள் என்ன காரணத்துக்காக அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டார்கள் என்பதையும் மறந்து செயற்படுவதுடன், இந்த ஏமாற்றுத் தனங்களுக்கு முடிவுகட்டவேண்டிய காலம் வந்திருப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனோ அல்லது தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை அதில் அங்கம் வகிக்கின்ற ரெலோ, புளொட் போன்ற அமைப்புகள் எவ்வாறு நோக்குகின்றன என்பதையும் தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *