சுமந்திரன் கூறிய கருத்துக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

1096

மாகாணசபையின் அதிகார வரம்பை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிடுவதா என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தில் வடக்கு மாகாண சபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
sumenthiran

புனர்வாழ்வு என்ற விடயம் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, மாகாண அரசிற்குச் சொந்தமான ஒரு அதிகாரப் பகிர்வாக அது இது வரையில் இல்லை என்பதையும், வடக்கிலும் கிழக்கிலும் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாணங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ரிசாட் பதியுதீனும் தற்போதய மைத்திரி – ரணில் ஆட்சியில் சுவாமிநாதனுமே புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டிய அமைச்சர்களாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளல், புதிய காணிகளை பகிர்ந்து வழங்குதல், அவர்களுக்கான வீடுகளைக் கட்டுவித்தல், வாழ்வாதாரங்களைக் கொடுத்தல் போன்ற சகல விடயங்களுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளதுடன், தமிழ் மக்களும் கூட இன்னமும் மீளக் குடியேற முடியாத நிலையும், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவர்கள் முகாம்களில் வாழக் கூடிய நிலையும் வடக்கில் தொடர்ந்தும் நிலவி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், மாகாண சபை மீள் குடியேற்றத்திற்கோ, புனர்வாழ்விற்கோ எதிராக இருக்கின்றது என்று சுமந்திரன் கூறுவது ஒரு பொறுப்பற்ற கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போர் நிறுத்த கால கட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை தலைவர் பிரபாகரன் ஏற்றிருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் இடம்பெற்ற கால கட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சகல மக்களும் வெளியேற்றப்பட்டு, யாழ்ப்பாணமே வெறிச்சோடிப் போயிருந்தது எனவும், போர் இடம்பெற்ற கால கட்டத்தில் இத்தகைய தவறுகள் நடந்துதான் இருக்கின்றது என்ற போதிலும், அவ்வாறு போர் இடம்பெற்ற காலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படும் போது, வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பொழுது முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு மன்னாரில், வவுனியாவில், முல்லைத்தீவில், கிளிநொச்சியில் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வருகின்ற நிலையில், இனச் சுத்திகரிப்பு என்பது எங்கிருந்து வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், ஓர் இனம் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் அல்லது தனது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதிருந்தால் அதனையே ஒரு இனச் சுத்திகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *