சுமார் 1500 ஏக்கர் வரையான நெல்வயல்கள் நீரில்

125

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால்,  சுமார் ஆயிரத்து 500 ஏக்கர்  வரையான நெல்வயல்கள் நீரில் மூழ்கி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல நாட்களாக கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக கடும் மழை பெய்து வருகிறது.

இதனால், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு குளம், அக்கராயன் குளம், கல்மடு குளம், வன்னேரிக்குளம்,  உள்ளிட்ட அனைத்துக் குளங்களும் நிரம்பி வான் பாய்ந்து வருகின்றன.

இதனால், அனைத்து குளங்களினதும் வான்கதவுகள் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், முரசுமோட்டை, பெரியகுளம், அக்கராயன், புதுமுறிப்பு, உருத்திரபுரம், கண்டாவளை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் பல இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை காலபோகத்தில்  சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.

இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், வடிந்தோடிய பின்னரே  அழிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்யமுடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *