முக்கிய செய்திகள்

சுரேஷ் சலெய் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

41

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில், அரச புலனாய்வுத்துறை பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலெய் (Suresh Sallay) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், அரச புலனாய்வுத்துறை பிரதானி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அரச புலனாய்வுத்துறை பிரதானி சுரேஷ் சலெய் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

சுரேஷ் சலெய், ஒரு காலத்தில் மலேசியாவின் பாதுகாப்பு இணைப்பாளராக தூதரகத்தில் பணியாற்றினார்.

சஹ்ரான், மலேசியாவுக்கு சென்று சுரேஷ் சலெய்யை சந்தித்ததாக இணையதளம் ஒன்று தெளிவாக செய்தி வெளியிட்டிருந்தாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதவிர அவர், இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார். சஹ்ரான் போன்ற தனி நபருக்கு, இதுபோன்ற பயணங்களை தனித்து செல்ல முடியாது. அதற்கு எவரேனும் உதவியளித்திருக்க வேண்டும்.

சுரேஷ் சலெய், கடந்த மூன்றரை, நான்கரை வருடங்களுக்கு முன்னர், போர் பயிற்சிக்காக இந்தியாவுக்கு சென்றார். எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், போர்ப்பயிற்சி நிறைவடைவதற்குள், நாட்டிற்கு வந்த அவர், அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்படுகிறார்.

எனவே, சுரேஷ் சலெய்யை அழைத்து விசாரணை நடத்தப்பட்டதா? என ஆணைக்குழுவிடம் தாம் வினவியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *