முக்கிய செய்திகள்

சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாளையும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

353

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக காவல்துறையினர் விடுவித்ததைக் கண்டித்தும், மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்தி மாணவியின் படுகொலைக்கு நீதிகோர வேண்டும் என்று காட்டுப்புலம் அபிவிருத்திச் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் காட்டுபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான சிவனேஸ்வரன் றெஜீனா என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட காவல்துறையினர், ஏனைய ஐந்து பேரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் காவல்துறையினர் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

காவல்துறையினரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் சுழிபுரம் சந்தியில் இன்று காலை சுழிபுரம் பகுதியில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் ஒன்று திரண்டு, மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு வடக்கு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க காட்டுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் கேட்டுள்ளது.

இதுதொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் இன்று பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *