முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

1010

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 9 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் இன்று மதியமளவில் கட்டுநாயக்கா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர் என்றும், அவர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு கடத்தப்பட்ட 9 பேரும் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த இலங்கை அகதிகள் 41 பேர் நாளை வியாழக்கிழமை அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பவுள்ளதாக இலங்கையின் இந்து மத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் காலத்தின் போது, இலங்கையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்குச் சென்று அகதி முகாமில் தங்கியிருந்தோரே, இவ்வாறு நாடு திரும்புவதாகவும், 13 குடும்பங்களைச் சேர்ந்த 41 போர் திருச்சியிலிருந்து நாளை இலங்கைக்கு திரும்ப உள்ளனர் என்று அது விபரம் வெளியிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1,905 குடும்பங்களைச் சேர்ந்த 5,225 பேர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளதுடன், சுமார் 64,000 தமிழர்கள் தமிழகத்தில் உள்ள 109 அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ள அவர், இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *