முக்கிய செய்திகள்

சென்னையில் பாரம்பரியத்துடன் நடந்த பொங்கல் விழா கல்லூரி மாணவிகள் அசத்தினார்கள்

1440

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது.

நேற்று சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் கிராமத்து பாரம்பரியத்தில் புடவை, பட்டுப்பாவாடை, தாவணி அணிந்து வந்து அசத்தினார்கள்.

கல்லூரி வளாகத்தில் மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது மாணவிகளும், பேராசிரியர்களும் குலவையிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்ந்தனர்.

நடனம் ஆடிய மாணவிகள்

அதைத் தொடர்ந்து பொங்கல் பானையை சுற்றி மாணவிகள் கும்மியாட்டம் ஆடி பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். பின்னர், வளாகத்தில் சில மாணவிகள் பறை இசைக்கு ஆட்டம் ஆடினார்கள். ஒலிபெருக்கியில் ஒலித்த இசைக்கு ஏற்ப வளாகத்தில் கூடியிருந்த மற்ற மாணவிகள் விசில் அடித்தபடி உற்சாகமாக நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார்கள்.

பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கிராமத்து சந்தையை போல ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் பஞ்சுமிட்டாய், மாங்காய், கொய்யாக்காய், பனியாரம், கேழ்வரகு கூழ், ஐஸ் கிரீம், ரவா லட்டு, கரும்பு ஜூஸ், இளநீர், மக்காச்சோளம், முருக்கு, மருதாணி, பாப்கார்ன் மற்றும் துணி வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.

உறியடிக்கும் நிகழ்ச்சி

கல்லூரி வளாகத்தில் ராட்டினம் இருந்தது. அதில் மாணவிகள் ஏறி மகிழ்ந்தனர். மாணவிகள் ஒன்றாக இணைந்து ‘செல்பி’ எடுத்து ஆனந்தம் அடைந்தனர்.

உறியடிப்பதில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாணவிகள் உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து கொண்டனர். இறுதியாக பி.சி.ஏ. இறுதியாண்டு மாணவி சரிகாஸ்ரீ உறியடித்து திறமையை வெளிப்படுத்தினார். பல்லாங்குழி, கல்லாங்கா விளையாட்டும் இந்த பொங்கல் விழாவில் இடம்பெற்று இருந்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *