சென்னையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 92 போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கும் உபகரணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி கடவுச்சீட்டு தடுப்புப் பிரிவினருக்கு, கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பயனற்ற கடவுச்சீட்டுக்களை விலைக்கு வாங்கி, அவற்றில் உள்ள நபரின் புகைப்படத்திற்கு பதிலாக, அவர்களுக்கு தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளிலுருந்து தெரியவந்துள்ளது.