சௌதி அரேபியாவில் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் உட்பட 5 செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சௌதி அரேபியாவின் சிறுபான்மை சமூகத்தினரான ஷியா முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பங்குபற்றியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், இந்த செயற்பாட்டாளர்கள் பதற்றம் நிறைந்த குவாட்டிப் பிராந்தியத்தில் போராட்டங்களில் பங்கேற்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
பயங்கரவாத வழக்குகளுக்கான தீர்ப்பாயம் ஒன்றில் அந்த விசாரணை நடைபெற்றதாகவும் குறித்த மனித உரிமை அமைப்பு விபரம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது தண்டனை பெறும் இஸ்ரா என்ற பெண்யே சௌதி அரேபியாவில் உரிமைகள் தொடர்பாக போராடி மரண தண்டனை பெறும் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, பொதுவெளியில் வராத மற்ற பெண் செயற்பாட்டாளர்களுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.
தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி கடந்த மே மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து குறைந்தது 13 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், மற்றவர்கள் எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.