முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

267

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு. அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு எனக்கு பயிற்சியளித்தார்.

நான் சுத்தமான கரங்களுடனேயே எனது அரசியலை ஆரம்பித்தேன், அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.

இதுவரை நான் வகித்த பதவிகள் எவற்றிற்காகவும் நான் யாருடைய ஆதரவையும் கோரியதில்லை. அந்த பதவிகள் தானாக என்னை வந்தடைந்தன.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் தேசத்தை கட்டியெழுப்பும் எந்த பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு தயார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பலர் எனது பெயரை குறிப்பிடுகின்றனர். வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் அவர்களிற்கு குறுக்கே நிற்கவிரும்பவில்லை.

கட்சி ஐக்கியத்துடன் ஏகோபித்த முடிவையெடுத்தால் நான் அதனை ஏற்றுக்கொள்வேன்” எனவும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *