முக்கிய செய்திகள்

ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

38

இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது இலங்கைக்கு மட்டுமே எதிரானது என்பதுபோலத்தான் இங்கே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், மறுக்கப்படும் மனித உரிமைகளுக்காகவே அந்த அமைப்பு குரல் கொடுக்கிறது. மனித உரிமை என்பது தமிழர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.

தற்போதைய பிரதமர் தான், முதன் முதலான ஜெனிவாவை சிறிலங்காவுக்கு அறிமுகப்படுத்தினார். 2009 இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மட்டுமல்ல, வெலிக்கடை சிறைச்சாலைத் தாக்குதல், ரத்துபஸ்வ தாக்குதல், அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல், ஜனாசாக்களை தகனம் செய்வது என அனைத்தும் மனித உரிமை மீறல்களாகவே கருதப்படுகிறது.

சிறிலங்காவில் உள்ள இளைஞர்களிடம் கேட்டால், அவர்கள் கனடா, அவுஸ்ரேலியாவுக்கு செல்லத்தான் ஆசைப்படுவார்கள். அந்த நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதால்தான் அனைவரும் அந்நாடுகளை விரும்புகிறார்கள்.

மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு முழுமையான அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியாது. அபிவிருத்தியும் மனித உரிமையும் ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பதை முதலில் இவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *