முக்கிய செய்திகள்

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றின் வெட்கக்கேடான வடு

546

பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றின் வெட்கக்கேடான வடு என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த 1919ம் ஆண்டு பஞ்சாப் அம்ரிதசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அமைதி வழியில் போராட வந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்கிலேய ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உலக சரித்திரத்தில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நுற்றாண்டு நினைவு தினம் வரும் ஏப்ரல் 13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டுமா என்பது குறித்து நேற்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்..பிக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே இன்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான வடு. கடந்த 1997ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்கு செல்லும் முன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறியது போல் இந்த படுகொலை இந்தியாவுடனான எங்கள் கடந்த கால வரலாற்றில் ஒரு மோசமான உதாரணம் என்றார்,.

இந்த சம்பவத்திற்கும் அதனால் ஏற்பட்ட வலிகளுக்கும் நாங்கள் மனமார எங்கள் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த படுகொலைக்கு இதற்கு முன்பும் பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இன்று இந்தியா – பிரிட்டன் இடையே பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் நல்ல நட்புறவு நிலைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய வம்சாவளியினர் பிரிட்டன் சமூகத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்தியாவுடனான எங்கள் உறவு தொடர்ந்து மேம்பட நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என தெரசா மே தெரிவித்தார்.

தெரசா மேவின் அறிக்கைக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கார்பின் ‘‘ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு முழுமையான, தெளிவான மன்னிப்பு தேவை’’ என கூறினார்.

பிரிட்டன் அரசு இது குறித்தும் தொடர்புடைய மற்ற விஷயங்கள் குறித்தும் பரிசீலித்து வருவதை வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ஃபீல்டின் உரை தெளிவுபடுத்தியது,
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *