முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1072

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்கா கனடா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெனிவாவில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 12ஆம் நாள் பாரதி கலாசார அமைப்பினால் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம், மனித உரிமைபேரவை வளாகத்தின் 23 ஆம் இலக்க அறையில்நடத்தப்படவுள்ளது.

அதேபோன்று 13 ஆம்நாள் தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில், 7 ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ள இந்த உபக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

14 ஆம்நாள் புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான சிறப்பு உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளதுடன், 15 ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் ஒரு அனைத்துலக மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் சிறப்பு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொடர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் 21 ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளதுடன், இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 16ஆம் நாள் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது.

மற்றுமொரு அனைத்துலக அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்நாள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதுடன், இந்தக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.

இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபக்குழுக்கூட்டம் 20 ஆம்நாள் 25 ஆம் இலக்க அறையில், இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அந்தவகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளதுடன், இவை உள்ளடங்களாக மொத்தமாக 14 உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில், இந்த அனைத்துக் கூட்டங்களிலும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து வலியுறுத்தவுள்ளனர்.

இதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன், பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுடன் ஐந்துபேரைக் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் இம்முறை ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளனர்.

குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் இம்முறை ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறவுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *