அனைத்துலக தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளி நாட்டைச் சேர்ந்த சுமார் 17 தொண்டு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவை பாகிஸ்தான் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவுக்கு பாகிஸ்தானில் இயங்கும் பல சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ‘ஆக்சன் எய்ட்’ பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இந்த முடிவு அதிகரிக்கிறது என்று விபரித்துள்ளது.
அதேவேளை குறித்த இந்த உத்தரவு குறித்து கருத்து கூற பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சிஐஏ நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது 2011-ல் கண்டறியப்பட்ட பின்னர், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்து வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் அண்மையில் பதவி ஏற்றுள்ளதை அடுத்து, அந்த நாட்டு அரசியலைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ள்பபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.