முக்கிய செய்திகள்

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தை சீனா விட்டுக் கொடுக்காது: ஜி ஜின்பிங்

902

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு சீனா விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும் தொடர்ந்து நிரந்தர அதிபராக அவர் நீடிக்கும் சூழல் உருவாகியது.

இதனைத் தொடர்ந்து சீன நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் அந்த நாட்டு அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று ( செவ்வாய்க்கிழமை) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே ஜி ஜின்பிங் உரையாற்றினார்.

அதில், அவர் பேசியதாவது, “சீனா தனது இறையாண்மையை காப்பாற்றும். தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு சீனா விட்டுக் கொடுக்காது.

நாட்டினுடைய இறையாண்மை மற்றும் இந்த பிராந்தியத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும். தாயகத்தை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும். இது அனைத்து சீன மக்களின் எதிர்பார்ப்பாகும். இது நமது தேசத்தின் அடிப்படையோடு ஒத்திருக்கிறது.

நாட்டைப் பிரிக்கும் எந்த நடவடிக்கையும் தோல்வியடையும். இந்தப் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் மக்களின் கண்டனம் மற்றும் வரலாற்றின் தண்டனைகளைதான் சந்திக்கும். சீனா மேலாதிக்கம் எண்ணம் கொண்டு விரிவாக்கத்தில் ஈடுபடாது. பிறரை பயமுறுத்துவர்கள்தான் அனைவரையும் அதே கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள்” என்றார்.

சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.

மேலும், தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *