வடக்கு மாகாணத்தில் நேற்று தனியார் பேருந்து நடத்துநர் உள்ளிட்ட 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 379 பேரின் மாதிரிகளை சோதனைக்குட்படுத்திய போதே, 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த, வலைப்பாடு மீன்வாடியில் தொழில் செய்யும் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த, தனியார் பேருந்து நடத்துனருக்கும், வவுனியா – செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகளுக்கும், மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த, எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவர் என இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் – முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் உயிரிழந்த பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.