முக்கிய செய்திகள்

தன்னார்வ தொண்டர்களாக செயற்படும் பாதுகாப்புக் குழுவினர் இஸ்ரேல் வழியாக யோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு சிரியா அரசு கண்டனம்

385

சிரியாவில் வெள்ளை தலைகவசம் அணிந்து தன்னார்வ தொண்டர்களாக செயற்படும் பாதுகாப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டு, அவர்கள் இஸ்ரேல் வழியாக யோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவினர் வெளியேற்றப்பட்டது இஸ்ரேலும் அவர்களது கருவியாக செயல்பட்டவர்களும் செய்த குற்ற நடவடிக்கை என்றும் சிரியா விமர்சித்துள்ளது .

இந்த வெறுக்கத்தக்க செயலைப் பற்றி விமர்சிப்பதற்கு கண்டனச் சொற்கள் போதுமானதல்ல என்று சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று திங்கள்கிழமை கூறியுள்ளது.

அத்துடன் இந்த வெள்ளைத் தலைகவசம் அணிந்து செயற்படும் தொண்டுக் குழுவினர், கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பதாகவும், ஜிகாதிக் குழுக்களோடு அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதிபர் பஷார் அல் அஸாத் அரசாங்கமும், பஷார் அல் அஸாத்தின் ஆதரவு சக்திகள் மற்றும் கூட்டாளி நாடான ரஷ்யா என்பன தெரிவித்துள்ளன.

ஆனால் தாங்கள் தன்னார்வலர்கள் என்றும், சிரியாவின் போர்க் களப் பகுதிகளில் மக்களைக் காப்பதற்காக செயல்பட்டதாகவும், வெள்ளை தலைகவசம் அணிந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குண்டு வீச்சுக்கு உள்ளான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் இந்த வெள்ளைத் தலைகவசம் அணிந்த தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகளுக்காக அவர்களை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

சிரியாவின் தென் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அரசுப் படைகள் முன்னேறி வருகின்ற நிலையில், இந்த வெள்ளைத் தலைகவசம் அணிந்த குழுவினர் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்று கருதப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க்பபடடது.

சண்டைப் பகுதியில் இருந்து அந்த தொண்டர்களும் அவர்களின் குடும்பத்தினரும் என 422 பேரே வெளியேறி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதி வழியாக ஞாயிற்றுக்கிழமை யோர்ர்டான் அழைத்துச்செல்லப்பட்டனர்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று அந்த குழுவினர் வெளியேற உதவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *