தமது காணிகளை மீட்பதற்காக கேப்பாப்பிலவில் மக்கள் 518 ஆவது நாளாக வீதியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்

324

500 நாட்களை தாண்டி வீதியில் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற இலங்கையின் பிரதி அமைச்சர்களிடம் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் நாள் ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு ஆண்டை தாண்டிய நிலையில் 518ஆவது நாளாக இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது.

இந்த நிலையில் தாம் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு, மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அதேபோன்று தமது பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதனால், விவசாய பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராமநாதன், வீதியில் கிடக்கும் இந்த விவசாய பெருமக்களை குடியேற்ற உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்து நாடாளுமன்றுக்கு அனுப்பியவர்களால் எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையிலேயே, இவர்கள் தற்போது இநத் புதிய பிரதி அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *