முக்கிய செய்திகள்

தமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

667

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுப்ரமணியன் சுவாமி தனது கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும், இலங்கை அரசாங்கம் அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அந்த கீச்சகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் 28ஆம் நாள், தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னாருக்கு கப்பல் மூலம் அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கிலேயே அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *