முக்கிய செய்திகள்

தமிழகம் – அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு

891

தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் முக்கியமான 20 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 எஸ்.பிக்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையை அடுத்த கூவத்தூர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக தலைமைச் செயலகம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியில் துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், அவர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *