முக்கிய செய்திகள்

தமிழக அரசியல் நாடகங்களும், மெரீனா கடற்கரையும்

1010

தமிழக அரசியல் நிகழ்வுகளும், சென்னை மெரீனா கடற்கரையும் பிரிக்க இயலாத ஒன்றாக மாறிவிட்டதை, மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் நேற்றைய தியானமும், அதன் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்: சென்னையில் பரபரப்பு
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ. பன்னீர் செல்வத்தின் நேற்றைய தியானமும்
நேற்று ஓ. பன்னீர் செல்வம் கூறிய குற்றச்சாட்டுக்களை அதிமுகவின் பொது செயலாளர் வி.கே. சசிகலா மறுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் மெரீனா கடற்கரைக்கு ஒரு முக்கிய இடம் இருப்பதை பல முந்தைய சம்பவங்கள் காட்டியுள்ளது.
காவிரி விவகாரம்: ஜெயலலிதா உண்ணாவிரதம்
கடந்த 1993- ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இந்திய பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி வற்புறுத்த வேண்டும் என்று கோரி முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னை மெரீனா கடற்கரையில் `திடீர்’ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
1993-ஆம் ஆண்டில் மார்ச் 18-ஆம் தேதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக 1993-இல் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜெயலலிதா
Image caption
காவிரி விவகாரம் தொடர்பாக 1993-இல் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜெயலலிதா
பின்னர் அவர் சமாதியின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
நான்கு நாட்களுக்கு பிறகு, மார்ச் 21-ஆம் தேதியன்று, பிரதமர் நரசிம்மராவின் அறிவுறுத்தலின்படி சென்னை வந்த மத்திய நீர்வள துறைத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இலங்கை போர்: கருணாநிதியின் உண்ணாவிரதம்
இதே போல், கடந்த 2009-ஆம் ஆண்டில் சென்னை மெரீனா கடற்கரையில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனையில் நடத்திய உண்ணாவிரதமும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தக் கோரி, 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியன்று காலையில் மெரீனா கடற்கரையில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி.
இலங்கை போரை நிறுத்திட கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட கருணாநிதிபடத்தின் காப்புரிமைREUTERS
Image caption
இலங்கை போரை நிறுத்திட கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட கருணாநிதி
முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர் உண்ணாவிரதத்தில் இறங்கியது, குடும்பத்தினரையும், கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தனது மகள் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோருடன் அவர் அங்கு வந்தார். அதன் பிறகுதான், தகவல் தெரிந்து, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் அங்கு விரைந்து வந்தார்கள். தொண்டர்களும் பெருமளவில் கூடினார்கள்.
பின்னர், பெரும் ஆயுதங்களைக் கொண்டு நடத்தும் தாக்குதல்கள் மக்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் நடக்காது என்று இலங்கை அரசு அறிவித்ததாக தகவல் வந்த நிலையில், தனது உண்ணாவிரத்தை பின்னர் முடித்துக் கொள்வதாக ஆண்டு மாலையே கருணாநிதி அறிவித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மெரீனா கடற்கரை
ஜல்லிக்கட்டு: சென்னையின் சில பகுதிகளில் கலவரம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், இதனை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதியன்று சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பேரணியொன்றை நடத்தினர்.
அதன் பின்னர், மாணவர்களும், இளைஞர்களும் சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடத்திய , ஆர்ப்பாட்டங்களும் பின்னர் நடந்த வன்முறையும் மெரீனா கடற்கரையின் முக்கியத்துவத்தை மேலும் சுட்டிக்காட்டின.
சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்
மாநிலத்துக்கு அரிசி ஒதுக்கீடு கோரி எம்.ஜி.ஆர். நடத்திய உண்ணாவிரதம்
இதற்கு முன்னர் எம்,ஜி.ஆர் முதல்வராக இருந்த போதும், 1983-ல் மெரினா கடற்கரையில் , தமிழகத்துக்கு அரிசி ஒதுக்கீடு கோரி மத்திய அரசை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில். சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய இது போன்ற சம்பவங்கள் மட்டுமல்லாமல், வேறு பல முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கும் மெரீனா கடற்கரை சாட்சியமாக இருந்திருக்கிறது.
1983-ல் மெரினா கடற்கரையை அழகுபடுத்த அங்கிருந்த மீனவர் குப்பங்களை அப்புறப்படுத்த எம்.ஜி.ஆர். அரசு முயன்றபோது எழுந்த எதிர்ப்புப் போராட்டங்களை தேவாரம் தலைமையிலான போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்ததும் மெரினா கடற்கரையில்தான்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடே சிரிப்புதான்: ஓபிஎஸ்
இதனிடையே , நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவில், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர் செல்வம், தான் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிரடியாக புகார் தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தின் அதிரடி அறிவிப்பு பற்றி மக்கள் – காணொளி
அதே நேரத்தில், மக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் தனது ராஜிநாமாவை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிலைகளும், நினைவகங்களும்
1968-ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பின், மெரீனா கடற்கரையில், பல தமிழறிஞர்கள் சிலைகளும் நிறுவப்பட்டன. இதில் அமைக்கப்பட்ட சிலைகளில் ஒன்றான, கண்ணகி சிலை, ஜெயலலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் அகற்றப்பட்ட போது பெரும் சர்ச்சை எழுந்து, அந்த சிலை மீண்டும் 2006ல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி உருவானபோது, நிறுவப்பட்டது.
மெரீனா கடற்கரையில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை வைக்கப்பட்டது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று போடப்பட்டு , அந்த சிலையை அங்கிருந்து அகற்ற அரசு ஒப்புக்கொண்டாலும், இன்னும் அந்த சிலை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை.
மெரீனா கடற்கரை
Image caption
மெரீனா கடற்கரை
பின்னர் திமுகவின் நிறுவனர் அண்ணா மறைந்தபோது , அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது, பின்னர் எம்.ஜி.ஆர், அதன் பின்னர் ஜெயலலிதா என மற்ற தலைவர்களது உடல்களும் அங்கு அடக்கம் செய்யப்பட வழிவகுத்தது. இந்த பழக்கம் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படும் மெரீனா கடற்கரையின் அழகையும், பொதுமக்கள் அதைப் பயன்படுத்துவதையும் பாதிப்பதாக சர்ச்சைகளும் எழுந்தன.
பழைய தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை, மெரீனா கடற்கரை , சென்னையைக் குறிக்க காட்டப்படும் இடமாக பயன்படுத்தப்பட்டது. சென்னை என்றாலே பழைய திரைப்படங்களில் முதலில் காட்டப்படும் முக்கிய இடங்களில் மெரீனா கடற்கரையும், அண்ணா சாலையில் அமைந்திருக்கும் ( அப்போது சென்னையின் மிக உயரமான கட்டிடமான) எல்.ஐ.சி கட்டிடமும்தான் இருந்தன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *