தமிழரின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும் -சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

948

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணி அதிகாரத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, எமது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல காணிகள் இலங்கையின் வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களங்களாலும், மகாவலியாலும் மற்றும் அரச காணி, புனித தலங்களுக்கான நிலம் என்ற அடிப்படையிலும் இப்போது மறைமுகமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும், இவ்வாறான செயற்பாட்டை இல்ஙகை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் தான் அறிந்தவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் ஆணையாளராக இருக்கின்ற ஒருவர் வாகரையில் 500 ஏக்கர் காணியை படையினருக்கு வழங்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக அறிய முடிகின்றது என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று ரணவிரு படையினருக்காக 25 ஏக்கர் காணியை வாகரை பிரதேசத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்க விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் மட்டக்களப்பு புணானை கிழக்கு பிரதேசத்தில் உள்ளடக்கியதாக ஒரு பௌத்த நிலையத்தை நிறுவவேண்டும் என்ற செயற்பாடும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்திற்கு எதிரான முரண்பாடான செயற்பாடுகளை செய்யக் கூடாது என்ற போதிலும், இன்று நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டு மட்டக்களப்பில் மட்டுமன்றி அம்பாறை, திருகோணமலை உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணிகள் ஏதோஒரு விதத்தில் பலவிதமாக அடையாளப்படுத்தப்படுகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணிகளை அநாவசியமாக அபகரிப்பதும் ஒருவகையில் சனநாயகரீதியான ஒரு உரிமை மீறலாகத்தான் பார்க்கப்படும் என்றும், ஏனென்றால் இந்தக் காணிகள் எமது மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையான ஒரு பொருளாதார காரணியாக இருக்கின்ற நிலையில், இப்படி காணிகளையும் வளங்களையும் மையமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு செயற்பாடும், தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சிமீது சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது எனவும் சிறீநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *