தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்?

293

இந்தி திணிப்பு’ என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ளதுகூகுள் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் அதன் தேடுதல் சேவையின் மீதுதான் தற்போது ‘இந்தி திணிப்பு’ குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டில், கூகுளுக்கு சொந்தமான ‘குரோம்’ உலாவியில் (Browser) ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான தேடலை மேற்கொள்ளும்போது, அதற்கான விளக்கம் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும், பயன்பாட்டாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது என்பதே அந்த குற்றச்சாட்டு.

இதுகுறித்த தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கிலுள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் குழு ஒன்றில் பதிவிட்ட முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான வசந்தன் திருநாவுக்கரசர், “ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் எனது அலைபேசியின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளது. பிரிட்டனில் மேற்கல்வி பயின்று வரும் நான் சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். அப்போது, எனது அலைபேசியில் ஆங்கில சொல் ஒன்றுக்கு கூகுளில் தேடல் மேற்கொண்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் தேடிய ஆங்கில சொல்லுக்கு ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் பதில் வந்தது. மீண்டும் எனது அலைபேசியில் மட்டுமின்றி குடும்பத்தினரின் அலைபேசியிலும் முயற்சித்தபோதும், அதே ஆங்கிலம் & இந்தி என்ற வகையிலேயே பதில் கிடைத்தது” என்று அவர் கூறுகிறார்.

தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive

தனது தினசரி பயன்பாட்டில் கூகுள் இருந்து வரும் நிலையில், இதுபோன்றதொரு திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வசந்தன் கூறுகிறார். “எனது மொழிசார்ந்த பெரும்பாலான பயன்பாடுகளில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளித்து வரும் நிலையில், என்னை கேட்காமலே இதுபோன்ற ஒரு திணிப்பை கூகுள் மேற்கொண்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆங்கிலம் & இந்தி என்ற தெரிவை கொடுக்கும் கூகுள், கண்டிப்பாக ஆங்கிலம் & தமிழ் என்றொரு தெரிவையும் கொடுக்க வேண்டியது அவசியம்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *