முக்கிய செய்திகள்

தமிழர்களின் கோரிக்கைகளால் இலங்கையின் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டி அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார்

484

வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கண்டி அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரரை, நேற்று முன்தினம் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துக் கலந்துரையாடியபோதே, தேரர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றதெனவும், இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழர் தரப்பிலிருந்து தங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கோரிக்கையை ஏற்று, தாமும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மக்களின் சில பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அனுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமஷ்டி ஆட்சிமுறை, மாகாண சுயாட்சி மற்றும் வட மாகாணத்துக்கான காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைகளும் தமிழர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

இலங்கையானது ஒற்றையாட்சி நாடு என்பதனால், இவ்வாறான கோரிக்கைகள் ஒற்றையாட்சி முறைமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இந்தக் கோரிக்கைளுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தாம் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *