முக்கிய செய்திகள்

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் புதுவருடம் இன்று

352

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் புதுவருடம் இன்று உற்சாகமான முறையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

உழவுத் தொழிலுக்கும் உலகிற்கும் ஆதாரமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழர்கள் தைப்பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு, வீடுகள் தோறும் முற்றத்தில் பொங்கலிட்டு சூரியபகவானுக்குப் படைத்து, உறவினர்களுடன் உண்டு மகிழுவது தமிழரின் பாரம்பரிய வழக்காகும்.

அத்துடன், இன்றைய நாளில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் கிராமங்கள் தோறும் இடம்பெறும்.

இந்த முறை கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

சிறிலங்காவில், பொதுமக்கள், அதிகளவில் விழிப்புடன் இருக்குமாறும், உறவினர்கள், வீடுகள், ஆலயங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், அதிகாலையிலேயே ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த பல நாட்களாக அடை மழை நீடித்து வந்த போதும், இன்று காலையில் பொங்கலிடும் நேரத்தில் மழை ஓய்ந்திருந்ததால்,  மக்கள் ஆர்வத்துடன் பொங்கலைக் கொண்டாடியிருந்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வல்வெட்டித்துறை பட்டப் போட்டி இம்முறை கொரோனா தொற்று நிலையால் இடம்பெறவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *