முக்கிய செய்திகள்

தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

364

தமிழ் மக்கள் எப்போதும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை எனவும், போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகும் நிலையில், இராணுவம் தமிழர் நிலங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவது முட்டாள்தனம் என்று முன்னாள் சிறிலஙகா இராணுவ தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா கூறயுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தவர் என்ற வகையில் அவர் இராணுவ ரீதியாகவே சிந்திப்பார் எனவும், ஆனால் எக்காலத்திலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே தமிழர்கள் இருக்கவேண்டும் என்று எங்கும் எழுதிக்கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது எனவும், ஆகவே இராணுவம் எங்களுடைய மக்களின் நிலங்களில் இருந்து படிப்படியாக வெளியேறவேண்டும் எனவும், இனியும் நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்ஙகையில் உள்ள ஏனையவர்கள் போல நாங்களும் சம அந்தஸ்த்து கொண்டவர்கள் என்பதன் அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்றக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவம் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்வதாக சமகால இராணுவ தளபதி தெரிவித்துள்ள போதிலும், அந்த நன்மைகள் எங்களுடைய மக்களை தங்கள் வசப்படுத்துவதற்கான முயற்சி மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களுடைய உரிமைகளை எங்களிடம் கொடுத்த பின்னர் இராணுவம் இங்கே எதாவது செய்தால் அதனை ஓரளவுக்கு சகித்துக் கொள்ளலாம் எனவும், ஆனால் மத்திய அரசாங்கம் எங்கள் உரிமைகளை பறித்து வைத்துக் கொண்டு தங்களுடைய பிரதிநிதிகளாக இராணுவத்தை இங்கே வைத்துக் கொண்டு, நல்லிணக்கம் குறித்து பெருமிதப்பட்டு பேசுவதும், இராணுவம் இங்கே இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்று கூறுவதும் இராணுவ ஆக்கிரமிப்பு எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமேயாகும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *