முக்கிய செய்திகள்

தமிழர்கள் தற்போது உள்ள பதவிகளையும் துறந்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தான் நினைத்ததைத் செய்துவிடும்

1121

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பதவிகளை நாம் துறந்துவிட்டால், இல்ஙகை அரசாங்கம் தான் நினைத்ததைச் செய்துவிடும் எனவும், எனவே அந்தப் பதவிகள் முக்கியம் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவி துறப்பதில் ஒரு விதமான பிரச்சினையும் இல்லை எனவும், கடந்த 1972ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் பதவி துறந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அவரது தொகுதியில் 1975ஆம் ஆண்டு தான் மீண்டும் தேர்தலை நடாத்தியதாகவும், அதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம் தான் நினைத்ததைச் செய்து முடித்து விட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

அத்துடன் தாம் பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தங்களைப் பதவிகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் சில வேலைகளைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உடனடியாக உணர்ச்சிகரமான தீர்மானத்தை நாங்கள் எடுக்கக் கூடாது எனவும், நாங்கள் பதவிகளைத் துறந்த மறுகணமே, அரசாங்கம் தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் எனவும், அதற்கு நீதி கேட்டால், அவர்கள் தாமாகத்தானே பதவியைத் துறந்தார்கள் என்று அரசாங்கம் காரணம் கூறும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாண சபையின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த பதவிக் காலத்துக்கு முதலமைச்சராகப் போட்டியிடுவீர்களா எனவும், போட்டியிட்டால் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர்கள் என்றும் முன்வைக்ப்பட்ட கேள்விக்கும் பதிலளித்த முதலமைச்சர், அதுகுறித்து சிந்திப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது எனவும், கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதம் முன்னர் வரையில் தான் தேர்தலில் போட்டியிடுவதாககூட இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *