தமிழர் தாயகத்தில் சீரற்றகாலநிலை;இயல்புநிலை பாதிப்பு

35

சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். குடாநாட்டில் பெய்த மழை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களை சேர்ந்த 2ஆயிரத்து108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

15 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரத்து 452 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *