முக்கிய செய்திகள்

தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சியை தடுக்கவே உணவுப் புறக்கணிப்பினை முடித்து வைத்தாக தெரிவிக்கப்படுகிறது.

954

தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சி ஒன்றினைத் தடுத்து நிறுத்தவே, இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு, வவுனியா உணவுப் புறக்கணிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவிததுள்ளார்.

இறுதிக்கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சாகும் வரையான உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த உறவினர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு எங்கும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தமிழர் தாயக இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அரசாங்கம் நன்கு திட்டமிட்டு எம்மவர்கள் சிலரின் ஆசீர்வாதத்துடன் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், இது பெரிய நாடாகம் எனவும் அவர் சாடியுள்ளார்.

தமிழ் நாட்டில் சல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி உலகெங்கும் எம் உறவுகளால், குறிப்பாக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அரசாங்கம் திணறிப்போய், இறுதியில் அடிபணிந்து சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசு அடிபணிந்து தடையை நீக்கியது போல் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் போராட்டம் வீரியம் பெற்று இளைஞர் புரட்சிக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், உண்ணாவிரதிகள் மரணிக்க நேர்ந்தால், அனைத்துலக சமூகத்துக்கு முன்னால் தலை குனிந்து நின்று பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சியே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மகனோடு தான் வருவோம் இல்லையேல் பிணமாகத்தான் வருவோம்’ என உறுதியாகவும், தம்மை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லக்கூடாது என்ற வைராக்கியத்தோடும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், இறுதியில் உறுதியற்றுப் போவதற்கு, எம்மவர்கள் சிலர் தமது அரசியல் வித்துவத்தைக் காட்டி, தாம் வெற்றிப் பெற்றதாக எண்ணினால், அது துரோகத்தனமானது மட்டுமன்றி அரசியல் அறிவிலித்தனமும் ஆகும் எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எமது உறவுகளின் பெற்றோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியானதே என்ற போதிலும், அவர்கள் நித்தமும் செத்துக்கொண்டிருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் உறுதியளித்ததன் பிரகாரம் எதிர்வரும் 9ஆம் நாள் உரிய பதில்களை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமற்போனவர்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியவையே அலரி மாளிகையிலும் கூறப்படும் என்றால், சந்திப்பொன்றுக்கான தேவை அவசியமாக இருக்காது எனவும், பொறுப்பான பதிலை நல்லாட்சியின் தலைவர்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீண்டும் காலம் தாழ்த்துவதையோ, தட்டிக்கழிப்பதையோ, ஏமாற்று நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற முயற்சிப்பதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், உரிய பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் செயற்பட்டு தீர்வினைப் பெற்றுத்தர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அர்த்தமுள்ள, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி கோரி நியாயம் தேடி வரும் உறவுகளின் உணர்வோடு, தேசிய நல்லிணக்க அரசு விளையாட முனையக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மேலும் தெரிவிததுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *