முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் பரந்து வாழும் அனைத்து இடங்களிலும் மாவீரர் நாள்!

2431

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகில் தமிழர் பரந்து வாழும் அனைத்து இடங்களிலும் இன்று மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.

தாயகத்தில் தமிழர்களின் ஆயுதப் போர் மெளனித்த பின்னர், முதல் முறையாக மாவீரர் துயிலும் இல்லங்களில் மரபு ரீதியாக பேணப்பட்ட சம்பிரதாயங்களுடன் இன்று எழுச்சி பெற்ற வகையில் மாவீரர் நினைவுகூரல்கள் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும், மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம், மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம், வடமராட்சி கிழக்கு உடுத்தறை மாவீரர் துயிலும் இலலம், யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம், மட்டக்களப்பு மாவடி முன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் என வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் உள்ள, சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மாவீரர் இல்லங்களிலும் இன்று மாலை சரியாக 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டதுடன், அந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட மாவீரர்களின் உற்றார் உறவினர்கள் வெளியிடங்களில் இருந்து அங்கு வருகை தந்து தங்கள் மாவீர செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இன்றைய இந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் ஆண்கள், பெண்கள் என பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும், பிரசைகள் குழு போன்ற பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் முனைப்புடன் ஈடுபட்டு அளப்பரிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என வடக்கு கிழக்கினை பிரதிநதித்துப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களின் அலுவலகங்களிலும் மாவீரர் நாள் நினைவு கூரல் நிகழ்வுகளை இன்று முன்னெடுத்திருந்தனர்.

யாழ் பல்கலைகழகம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட் பல்கலைகழக சமூகத்தினரும் தமது பல்கலைகழக வளாக பகுதியில் ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர்.

இவை தவிர தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும், அவ்வாறு தமிழர் விடியலுக்காக ஆகுதியான பல் மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடங்களிலும், கோயில்கள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களிலும், மற்றும் தமிழர்களின் வீடுகளிலும் மாவீரர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுகூரல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை தமிழகத்திலும், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் மற்றும் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பல்வேறு தேசங்களிலும் இன்று மாவீரர் நாள் வெகு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போரட்டத்தில் 1982 ஆம் ஆண்டு உயிர் நீத்த முதல் போராளியான சங்கரின் வீரமரண நாளை அடிப்படையாகக் கொண்டு, 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 2008 ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வடக்குக் கிழக்கின் 70 சத வீத நிலப்பரப்பில் 32 மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வரை 17,688 மாவீரர்களும், 2009 மே 19 திகதி வரையான காலப்பகுதியினுள் சுமார் 50,000 வரையிலான மாவீரர்களும் இந்த மண்ணின் விடியலுக்காய் உயிர் நீத்துள்ளனர்.

தமிழரின் மண்மீட்புக்கான போரில் உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்களாலும், போரில் கொல்லப்பட்ட இலச்சக்கணக்கான மக்களின் வரலாற்றுப் பதிவுகளின் நிமித்தமே, தற்போதும் அனைத்துலக அரங்கில் தமிழ் தேசியத்தின் அரசியல் பயணம் சனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *