முக்கிய செய்திகள்

தமிழினத்தின் இருப்பை அழிக்கும் இறுதி ஆயுதமே போதைப் பொருள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

562

தமிழினத்தின் இருப்பை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் இறுதி ஆயுதமே போதைப் பொருள் எனவும், இது இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் வடமாகாண உடற் கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாகப் பெண்களைப் பெருமையுடன் பேணிவந்த தமிழினம் இன்று ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான பெண்களை, குழந்தைகள், முதுமைப் பெண்கள் என்று பாராது மிலேச்சத்தனமான முறையில் சிதைத்து செல்வதானது, கொடிய அரக்க குணம் கொண்டவர்கள் உருவாகிவிட்டார்களா என்று மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது எனவும், சிறுமியின் படுகொலையும் முதுமைப் பெண்ணின் உடலில் காணப்பட்ட காயங்களும் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்தப் போதைப் பொருள் பாவனையை முற்றுமுழுதாகத் தடைசெய்ய வேண்டும் எனவும், இல்லையேல் தமிழர் என்ற இனம் இலங்கையில் இருந்தது என்ற வரலாறு சிதைக்கப்பட்டுவிடும் எனவம் அவர் எச்சரித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு எமது அரசியல் தலைவர்கள் கொள்கை அளவில் வேறுபட்டாலும் இந்த விடயத்தில் உடன்பட்டு, ஒன்றுபட்டு, கருத்தொருமித்து, தமிழரின் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதுடன், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயப் பீதியைப் போக்க நம்பிக்கை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும் எனவும், அது அவர்களது தார்மீக கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நிலையில் மக்கள் சொந்த வீட்டில் இருப்பதற்கே பாதுகாப்பற்ற நிலை தோன்றி உள்ளது எனவும், இதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுவது போதைப் பொருள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்பட்டமையே என்றும், இதனை எவ்வாறு தடை செய்வது என்பது – ஆது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்தாலே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வித்தியா, றெஜினா என்று இவ்வாறான அவலங்கள் தொடர்கதையாக்காமல், அவற்றுக்கு இதனுடன் முற்றுப் புள்ளி இட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *