முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை புகழ்ந்தால் கைது

54

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவு கூர்ந்தும் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பவர்கள், தராதரம் பாராமல் கைது செய்யப்படுவார்கள் என்று சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது என்றும், ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவு கூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவு கூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள்” என்றும் சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்று முன்தினம், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *