சமத்துவம், நீதி மற்றும் அமைதியான முறையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதம் ஒன்றில் உரையாற்றிய வெளிவிவகார இணை அமைச்சர் முரளிதரன், இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சிறிலங்கா பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின் போது, சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
சமத்துவம், நீதி மற்றும் அமைதியான முறையில், சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான கடப்பாட்டை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கடமைகளுக்கும் இது பொருந்தும்.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்ரெம்பரிலும், கடந்த பெப்ரவரியிலும், நடத்திய மெய்நகர் கலந்துரையாடல்களின போது, தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிலங்கா தீர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.