முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடியலுக்காக ஆகுதியான தியாகதீபம் திலீபன் அவர்கள் உணவுத் தவிர்ப்பினை ஆரம்பித்த இன்றைய நாள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுகிறது

519

தமிழ் மக்களின் விடியலுக்காக ஆகுதியான தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த இன்றைய நாள் தமிழர் வாழும்பிரதேசங்கள் எங்கும் நினைவுகூரப்படுகிறது.

5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் தொடர்ந்து உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நாட்கள், இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றன.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் ஆரம்பித்த உணவுப் புறக்கணிப்புப் போராட்டம், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் மாதம் 26ஆம் நாள் திலீபனின் வீரச்சாவுடன் முடிவுக்கு வந்தது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன், அஹிம்சைவழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர்.

1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் பிறந்த பார்த்தீபன் யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்விகற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் இணைந்தார்.

ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்ததுடன், பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இதனைக் கண்டித்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும், இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என்று அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் திலீபன் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை என்று அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாததால் பன்னிரண்டாம் நாள் காலை 10.58 மணிக்கு வீரமரணமடைந்தார்.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்கள், ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *