அரசியல் சாசனத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்ப்பட மாட்டாது – இரா. சம்பந்தன்

1106

தமிழ் மக்கள் இலங்கையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின், அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் ஆர்வளர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டு கருத்து வெளியிட்டபோதே இரா சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முறையான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் அவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அதில் நாம் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லையாயின், அரசியல் அமைப்பு சட்டவரைபு முறையில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால், இதில் எமது எதிர்பார்க்கைகள் நிறைவேறாமல் இருக்குமாக இருந்தால் எம்மை ஆளமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் சூழுரைத்துள்ளார்.

அண்மையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து உரையாடிய போது, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சில விடயங்களை விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தின் மூலம் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே தங்களுடைய எதிர்பார்ப்பு எனவும், இதுவரை இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் சாசனமும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டுவரப்படாத நிலையில், இம்முறை அரசியல் சாசன ஆக்கத்தில் தாமும் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில், ஒரு மக்கள் கூட்டத்தின் சம்மதமில்லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது நடைமுறையிலுள்ள இலங்கையின் அரசியல் சாசனம் தமிழ் மக்களது சம்மதத்தை பெற்றது அல்ல எனவும், தற்பொழுது உருவாக்கப்படும் அரசியல் சாசனத்துக்கு தமிழ் மக்களுடைய சம்மதமும் பெறப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வாழுகின்ற பிரதேசங்களில் பிராந்தியங்களில் ஏற்படுத்தப்படும் சுயாட்சி தான் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற வகையில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வரவேண்டுமென்றே தாங்கள் கோருவதாகவும், அது வழங்கப்படுமானால் எமது சம்மதத்தை அரசியல் சாசனம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படுமாயின் இலங்கையின் புதிய அரசியல் சாசனத்துக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும், அது கிடைக்காவிட்டால் தமிழ் மக்களின் சம்மதமில்லாம் அவர்களை நாம் ஆளமுடியுமா என்ற முடிவை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டி வரும் எனவும், அதேபோன்று தாமும் பாரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *