தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால் ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழமுடியும்!

1123

வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதற்கு மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம் எனவும், தாம் ஒன்று சொன்னால் சிங்கள மக்களுக்கு மற்றொன்றைக் கூறுகின்றனர் எனவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் தொடர்பில் தெற்கில் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, “வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்” என்ற ஊடகசந்திப்பில் கலந்துகெர்ணடு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரிகள் அல்ல என்ற போதிலும், சமஷ்டி ஆட்சி முறையே எமக்கு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி்யுள்ளார்.

‘எழுக தமிழ்’ஆனது, மக்களுக்கான ஓர் அமைப்பு எனவும், அதில் சமூக அக்கறை கொண்டவர்களே உள்ள போதிலும், அதன் நடவடிக்கை தெற்கில் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையிலும், சமஷ்டி முறையினையே நாம் முன்வைத்துள்ளதுடன், சமஷ்டியே எமக்குத் தேவை எனவும், ஒன்றிணைந்த நாட்டுக்குள், அதிகாரப் பரவலாக்கலே வேண்டும் என்றும், அது தனி நாட்டுக் கோரிக்கை என்று அர்த்தப்படாது எனவும் அவர் விபரித்துள்ளார்.

எமது சமஷ்டிக் கோரிக்கையை அரசாங்கம் எந்தவிதத்தில் அணுகுகின்றது, என்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர்தான், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி யோசிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை குற்ற விசாரணையில் வெளிநாட்டு உள்ளீடுகள் வேண்டும் எனவும், பெரும்பான்மையின நீதிபதிகள் மேல் நம்பிக்கையில்லை என்ற நிலையில், வெளிநாட்டு நீதிபதிகள் நிச்சயமாக தேவை என்றும், இதனை தாம் அன்றி பெரும்பான்மையின சட்டத்தரணிகளே தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இராணுவத்தின் பிடியிலேயே வடக்கு மாகாணம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், 30 ஆண்டுகால போர் இடம்பெற்றமைக்காக 300 ஆண்டுகளுக்கு அங்கு இராணுவத்தை நிலைநிறுத்துவீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் சிங்கள மக்களுடன் கைகோர்க்கத் தயார் என்ற போதிலும், முதலில் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழ முடியும் என்ற போதிலும், அதற்கு முன்னர் எமக்குத் தீர்வு தேவை எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *