தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று அமெரிக்காவிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

1205

இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேற்று முன்தினம்  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அமெரிக்க தூதரிடம் இரா சம்பந்தன் விபரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ctrsampanthan

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பது மட்டுமின்றி, இறுதி போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியலமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரா.சம்பந்தனை சந்திப்பதும், அவரது கருத்துக்களைச் செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு இனிமையான அனுபவம் என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *