தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களே, விடுதலையாளர்களாக மாறவில்லை – சிவகரன்!

1101

தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருப்பதாகவும், தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை என்று்ம, தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் இளைஞர் அணி தலைவரும், மன்னாள் வெகுஜன அமைப்புக்களின் தலைவருமான சிவகரன் தெரித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற, அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் “விடியலைத் தேடும் இரவுகள்” மற்றும் “இரும்புக் கதவுக்குள்ளிருந்த” எனப்படும் இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அடிமைகளின் கல்லறைகளை விட தோற்றுப் போனவர்களின் கல்லறைகளுக்கு வரலாறு அதிகம் எனவும், இந்த கார்த்திகை மாதத்தில் விடுதலை என்கின்ற நோக்கோடு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அந்த வீர மறவர்களின் நாட்களை நெருங்குகின்ற காலக்கட்டத்தில், விடுதலை எனும் நோக்கோடு இறுதிவரை காவியங்களை நிகழ்த்திய இந்தக் காலத்தில் இவ்வாறன நிகழ்வு நெகிழ்ச்சியானதாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இன்று சிறைகளில் 153 பேர் இருப்பதாகவும், அது பற்றி சரியான தகவல் எவரிடமும் இல்லை என்றும் கூறியுள்ள அவர், சிறையில் உள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை விடுதலைக்காக போராடுகின்ற போராட்ட அமைப்புகளிடமோ, விடுதலையை பெற்றுக்கொடுகின்றோம் என்று சொல்லும் அரசியல் கட்சிகளிடமோ பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தகவல்கள் இல்லாது வெறுமனே கோசங்களுக்கு அப்பால் இலட்சியம் இல்லாத போராட்டம், அல்லது கோசங்களுக்கு அப்பால் உண்மைகளை கண்டுப்பிடிக்க முடியாத நிலைப்பாடு, இவற்றில்தான் வெறும் வெற்றுக் கோசங்களுகாக நாம் சென்றுகொண்டிருக்கின்ற சூழல் இருக்கிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த அரசியல் கைதிகளின் நிலைப்பாடு பற்றி ஒரு சரியான தளத்திலே எவ்வாறன் முன்னெடுப்புக்கள் இந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒரு கேள்வியை கேட்டால், அங்கு ஒரு பதில் கிடைக்க கூடிய சூழ்நிலை இல்லை எனவும், ஏனெனில் அவர்கள் இந்த நாட்டுக்கான விடுதலைக்காக சென்று சிறைகம்பிக்குள்ளே மாட்டிக்கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்காக நாங்கள் செய்தது என்ன? செய்ய விரும்பியது என்ன?, செய்வதற்காக வகுத்தது என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை எனவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நிலைப்பாடு என்ன? ஒவ்வொரு குடும்பங்களின் நிலைப்பாடு என்ன? எத்தனை கணவரை இழந்தவர்கள் இருக்கின்றார்கள்? எத்தனை அநாதைகள் இருக்கின்றார்கள்? எத்தனை அங்கவீனர்கள் இருக்கின்றார்கள்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள்? எத்தனை பேர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்? ஜநாவின் தகவலின் படி ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 608 பேர் காணாமல் போனார்களா? படுகொலை செய்யப்பட்டார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் உள்ளனவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வகையில் தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருப்பதாகவும். யாரும் குறை நினைத்தாலும் பரவாயில்லை, இவ்வாறு தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும் என்றும் சிவகரன் மேலும் தெரித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *