தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1228

தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் நாள் நடாத்தவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் என்றும், இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது என்றும், அதனை தாங்கள் ஒருபோதும் செய்யவும் மாட்டோம் என கூறியுள்ள அவர், அவற்றில் தாம் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சனநாயக முறையில், நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதிகளில் உள்ள விடயங்களைக் கையாளக்கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும், அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் நாள் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது என்றும், இது தமிழ் மக்கள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே தனது நீண்டகால எண்ணமாக உள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.

இது தொடர்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள சித்தார்த்தன், இப்படியான அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம்தான் இலங்கை அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும் என்பதுடன், தமிழ் மக்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *