முக்கிய செய்திகள்

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

977

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற காலைக்கதிர் நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தம்மால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்றும் ஆதங்கம் வெளியிட்டுள்ள அவர், இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்றும் விபரித்துள்ளார்.

தம்மைப் பொறுத்த வரையில் தான் எந்த மனோநிலையுடன் இரா சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ, அதே மனோநிலையில் தான் இப்பொழுதும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தான் முன்வைக்கும் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமக்கு உள்ளதாகவும், ஆனால் அது கொள்கை ரீதியானது என்றும் அவர் விபரித்துள்ளார்.

ஒரு அமைப்பினுள் கொள்கைகள் மாறலாம் என்ற நிலையில், அதற்காக அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமையாது என்றும், அது சனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முரண்பாடுகள் இருப்பதனால்த்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த சனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே தனது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சமயங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும், அவற்றை மாற்றிப் பேரம் பேசுவதற்குத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் வின்னேஸ்வரன், அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *