முக்கிய செய்திகள்

தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டது – விஜயகலா மகேஸ்வரன்.

1506

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த காலப்பகுதியில் அலுவலகங்களில் அல்லது வீடுகளில் பாலியல் துஸ்பிரயோகங்களோ சிறுவர் துஸ்பிரயோகங்களோ, அல்லது கணவன் மனைவி பிரச்சனைகளோ காணப்படவில்லையெனவும், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பதுங்குழிகளில் தண்டிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு தண்டனை பெற்று திருந்தியவர்கள் பலர் இன்று பல பிரபலமான பதவிகளிலும் அதிகாரிகளாகவும் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
vijiya-kala

ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளதாகவும் , அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ள அவர், கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிபதிகளது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலும் அவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்டிருந்த போதிலும், இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் சிறுமியர் துஸ்பிரயோகம், அவர்களை வேலைக்கு அமர்த்துதல், பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களும் தொந்தரவுகளும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இது போன்ற சம்பவங்களுக்கு நீதிமன்றங்களிலே குறுகிய காலத்தில் விசாரணை நடாத்தி, சட்டத்தினூடாக தன்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மாணவர்களின் கல்வி வீணடிக்கப்பட கூடாது எனவும், வடக்கு கிழக்கில் இறுதிப் போருக்கு முன்னர் இருந்த கல்வி வளர்ச்சியை விடவும் அதன் பின்னரான கல்வி வளர்ச்சி பின்னடைந்துள்ளது என்றும் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *